உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் இறந்தவர் உடலை வைத்து மயானத்திற்கு இடம் கேட்டு போராட்டம்

கும்மிடியில் இறந்தவர் உடலை வைத்து மயானத்திற்கு இடம் கேட்டு போராட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மயானத்திற்கு இடம் கேட்டு, இறந்தவரின் உடலுடன் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, 'ராகவேந்திரா சிட்டி' குடியிருப்பு பகுதியில், 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 'டிடிசிபி' அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை என்ற போதிலும், அதற்கான மயான இடம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு வசித்த விக்ரமன், 65, என்பவர், உடல் நல குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பொது சுடுகாட்டில் அவரது உடலை புதைக்க, கிராம முக்கியஸ்தர்கள் அனுமதி மறுத்து விட்டனர். இதனால், இறந்தவரின் உடல் வீட்டில் வைத்தபடி, அந்த குடியிருப்பின் நுழைவாயிலில், நேற்று குடியிருப்புவாசிகள் பந்தலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயானத்திற்கு இடம் ஒதுக்கும் வரை தொடரும் எங்கள் போராட்டம் என கோஷமிட்டனர். இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இறந்தபோது, இதே பிரச்னை ஏற்பட்டது. அப்போது பேசிய அரசு துறை சார்ந்த அலுவலர்கள் விரைவில் தனி இடம் ஒதுக்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர். கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் அவர்களிடம் சமாதானம் பேசினார். 'தற்சமயம் இறந்தவரின் உடலை கவரைப்பேட்டையில் புதைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. பி.டி.ஓ., அலுவலகத்தில் பேச்சு நடத்தி மயானத்திற்கான இடம் ஒதுக்கப்படும்' என உறுதியளித்தார். மக்கள் சமாதானம் அடைந்து, இறந்தவரின் உடலை கவரைப்பேட்டையில் புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ