கிராம சாலை சீரமைப்பில் அலட்சியம் அழிஞ்சிவாக்கத்தில் மறியல் போராட்டம்
மப்பேடு : கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் சத்திரம் பகுதியிலிருந்து, குன்னத்துார், மேட்டுக்காலனி, அழிஞ்சிவாக்கம் வழியாக, தண்டலம் --- அரக்கோணம் நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த கிராம சாலை மிகவும் சேதமடைந்து, மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 6.50 கோடி ரூபாய் மதிப்பில் ஓராண்டுக்கு முன் சாலை சீரமைக்கப்பட்டது.மேலும், சாலை சீரமைப்பு பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், வாகனங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இவ்வழியே பள்ளி மாணவர்கள் செல்லும் வகையில் இயக்கப்பட்டு வந்த தடம் எண் டி1 என்ற அரசு பேருந்தும் நிறுத்தப்பட்டது.இதனால், ஊராட்சி பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் 5வது வார்டு கவுன்சிலரான சுதாதேவி என்பவரின் கணவர் ஜானகிராமன் தலைமையில் நேற்று பகுதிவாசிகள் 25க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஊராட்சி செயலர் ஜார்ஜ் மற்றும் மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது ஊராட்சி செயலருக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, சப் - இன்ஸ்பெக்டர் சக்திவேல் சமாதான பேச்சு நடத்தினார். பின், சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், கடம்பத்துார் ஒன்றிய அலுவலரிடம் பேச்சு நடத்தி விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.