பி.டி.ஓ., அலுவலகத்தில் உறங்கும் உபகரணங்கள்
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை, கழிவுநீர் கால்வாயை துார்வாருவது, மழைக்காலத்தில் சாலைகளில் நீர் தேங்கினால் அதை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் துவங்கும் போது கடப்பாரை, மண்வெட்டி, பாண்டு, கத்தி, உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளுக்கு வழங்கும். அதன்படி அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 14 ஒன்றியங்களுக்கும், ஒரு மாதத்திற்கு முன் அனுப்பி வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது.திருவாலங்காடு ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட உபகரணங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் பி.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்கள் உபகரணங்கள் இன்றி, கைகளில் குப்பையை அகற்றுவதும், கடப்பாரை, மண்வெட்டி இல்லாமல் தெருக்களில் தேங்கிய மழைநீரை அகற்ற சிரமப்படுகின்றனர்.எனவே உபகரணங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளிடம் உடனடியாக வழங்கி ஊழியர்களுக்கு சென்றடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.