உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில்வே கேட் பராமரிப்பு பணி சுணக்கம்

ரயில்வே கேட் பராமரிப்பு பணி சுணக்கம்

திருத்தணி: திருத்தணி மேட்டுத்தெரு மற்றும் பஜார் பகுதி ஆகிய இடங்களில் ரயில்வே கேட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2வது கேட்டான பஜார் கேட் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் வேன் ஆகிய வாகனங்கள் அதிகாலை, 4:00 மணி முதல் நள்ளிரவு, 11:00 மணி வரை அதிகளவில் சென்றவாறு இருக்கும். இந்த கேட் வழியாக அரசு அலுவலகங்கள், அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட நகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மற்றும் மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.இந்நிலையில் ரயில்வே கேட் பாதை சீரமைப்பு, புதியதாக தண்டவாளங்கள் பொருத்தல் மற்றும் தண்டவாளங்களுக்கு இடையே பொருத்தப்படும் சிமென்ட் துாண்கள் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதமாக நடந்து வருகிறது. இருப்பினும் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை. இதனால் மக்கள் கேட்டை கடந்து செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் கேட் பராமரிப்பை விரைந்து முடித்து வாகனங்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து திருத்தணி ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே கேட் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனால், மேலும் ஒரு வாரத்திற்கு 2வது ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்தால், ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ