மீஞ்சூரில் விரைவில் ரயில்வே சுரங்கபாதை திருவள்ளூர் எம்.பி., தகவல்
மீஞ்சூர்:மீஞ்சூர் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் காட்டூர், நெய்தவாயல், வாயலுார், திருவெள்ளவாயல், புதுகுப்பம் உள்ளிட்ட, 80 கிராமங்களை சேர்ந்தவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மீஞ்சூர் ரயில்வே கேட் வழியாக பயணிக்கின்றனர். ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில் அங்குள்ள கேட் இடைவெளியில் புகுந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.கடந்த மாதம், இருசக்கர வாகனங்கள் கேட்டின் இடைவெளியில் செல்வதை தடுக்க, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.இது குறித்து மீஞ்சூர் பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், திருவள்ளூர் காங்., எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் முறையிட்டு மனு அளித்தனர்.அதன்படி, நேற்று எம்.பி., சசிகாந்த் ரயில்வே அதிகாரிகளுடன் மீஞ்சூர் ரயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பொன்னேரி எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் மற்றும் பல்வேறு அமைப்பினர் உடனடிருந்தனர்.ஆய்விற்கு பின், எம்.பி., சசிகாந்த் செந்தில் கூறியதாவதுவாகன ஓட்டிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிரமம் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. சுரங்கபாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும், அதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் பயணிப்பதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர். மீஞ்சூரில் விரைவில் சுரங்கபாதை அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.