உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைக்கு சேதமான தேசிய நெடுஞ்சாலை 5 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்; கவரைப்பேட்டையில் 1 கி.மீ., கடக்க 2 மணி நேரம்

மழைக்கு சேதமான தேசிய நெடுஞ்சாலை 5 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்; கவரைப்பேட்டையில் 1 கி.மீ., கடக்க 2 மணி நேரம்

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை பகுதியில் ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பால பணிகளால், இரு மார்க்கத்திலும் மணி கணக்கில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. மேம்பால பணிகளை விரைந்து முடித்து தற்போது பயன்பாட்டில் உள்ள இணைப்பு சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை --கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் அருகே உள்ள நல்லுார் சுங்கச்சாவடியில் இருந்து கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வரையிலான சாலை, ஆறு வழி விரைவுச்சாலையாக உள்ளது.கவரைப்பேட்டை பகுதியில் மட்டும் மேம்பால இணைப்பு பணிகள் பல ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டன.தற்போது வாகனங்கள் அனைத்தும் கவரைப்பேட்டை பஜார் பகுதி அமைந்துள்ள இணைப்பு சாலைகள் வழியாக சென்று வருகின்றன. ஒரு கி.மீ., இணைப்பு சாலையை கடப்பது என்பது வாகன ஓட்டிகளுக்கு மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது. சாலையை முறையாக பாராமரிக்க தவறுவதால் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், இணைப்பு சாலைகள் குண்டும் குழியுமாக மாறுகிறது. அந்த சமயத்தில், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, 5 கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் ஒரு கி.மீ., இணைப்பு சாலையை கடக்க, இரண்டு மணி நேரமாகுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலை பழுது சீரமைத்தாலும், குறுகிய இணைப்பு சாலையில் ஒரு வாகனம் பழுதாகி சாலையில் நின்றாலும், பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.நேற்று அதிகாலை பெய்த கனமழையில், கவரைப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள இணைப்பு சாலைகளில் மழைநீர் தேங்கி சாலை சேதமானது. சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் கண்களுக்கு புலப்படாத அளவிற்கு மழை நீர் தேங்கி இருந்தது. ஏராளமான வாகனங்கள் கடக்க முடியாமல் சிக்கியதால், பள்ளங்கள் இருந்த இடத்தில், பொக்லைன் ஒன்றை நிறுத்தி, அருகில் பேரிகாட் அமைத்து, குறுகிய ஒரு வழிச்சாலை வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டன. இதனால், இரு மார்க்கத்திலும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதித்தது. கவரைப்பேட்டையில் துவங்கி கும்மிடிப்பூண்டி வரையிலான 5 கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதேபோன்று எதிர் திசையில், கவரைப்பேட்டையில் இருந்து புதுவாயல் வரை, 4 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛கவரைப்பேட்டை மேம்பால பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். ஐந்து மாதத்திற்குள் பணி நிறைவு பெறும். அதுவரை இணைப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்காதபடி உரிய பராமரிப்பு பணிகளும், போக்குவரத்து சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்' என்றார்.

தொழிற்சாலைகள் பாதிப்பு

கவரைப்பேட்டையில் ஏற்படும் போக்குவரத்து ஸ்தம்பிப்பால், அவசர சேவைக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை தொடர்கிறது.கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய் கண்டிகை சிப்காட், ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டி ஆகிய தொழிற்சாலை வளாகங்களை இணைக்கும் முக்கிய சாலையாக மேற்கண்ட சாலை உள்ளது.மேலும் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது. கவரைப்பேட்டையில் ஏற்பIம் போக்குவரத்து ஸ்தம்பிப்பால், பிற மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்து பாதிப்பது ஒருபுறம் இருக்க மறுபுறம் உரிய நேரத்தில் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை கொண்டு சேர்க்க முடியாமல், தொழிற்சாலை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.

லட்ச கணக்கில் வசூல்

சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் சுங்கச்சாவடி முதல் எளாவூர் சோதனைச்சாவடி வரையிலான ஆறுவழி விரைவு சாலையை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. சுங்கச்சாவடியில் தினசரி லட்ச கணக்கான ரூபாயை சுங்க கட்டணமாக வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அதற்கு உரிய சேவையை வழங்குவது இல்லை என தொழிற்சாலை நிறுவன்த்தினர் புலம்பி வருகின்றனர். ஆறுவழி விரைவு சாலையில் எந்த தடங்கலும் இன்றி வாகனங்கள் கடந்து செல்ல வேண்டும். அதற்கு கவரைப்பேட்டையில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள இணைப்பு சாலையை தரமாக அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். கவரைப்பேட்டையில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க போலீசார் முறையாக கண்காணித்து வாகன போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை