திருத்தணி, ஊத்துக்கோட்டையில் மழை
திருத்தணி, அக். 6--திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு அச்சப்பட்டு முடங்கி கிடந்தனர். நேற்று காலை, 6:30 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. மதியம், 1:30 மணி முதல் ஒன்றரை மணிநேரம் திருத்தணி நகரத்தில் திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் நகராட்சி சாலை மற்றும் தெருக்களில் வெள்ளம் ஓடியது. மேலும் திடீர் மழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். கடந்த ஒரு வாரமாக கொளுத்திய வெயிலுக்கு நேற்று ஒன்றரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.இதே போல் திருத்தணி நகரை சுற்றியுள்ள கிராமங்களில் மாலை, 2:30 மணி முதல் ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை, 7:00 மணி முதல் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. மதியம், 12:00 மணிக்கு மேல் வானில் மேக கூட்டங்கள் ஒன்றாக திரண்டன. கரு மேகங்கள் சூழ்ந்த நிலையில், 1:00 மணிக்கு மழை துவங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால், வெயிலின் உக்கிரம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.