குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம் தசரதன் நகரில் தொற்று நோய் அபாயம்
பொன்னேரி;கால்வாய் துார்ந்து, தெருச்சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், தசரதன் நகர் குடியிருப்பு பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தசரதன் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, மழைநீர் செல்வதற்காக, 2023ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் முழுதும் செடிகள் வளர்ந்தும், மண் குவிந்தும் துார்ந்துள்ளது. இதனால், கால்வாயில் மழைநீர் செல்ல வழியின்றி, தெருச்சாலைகளில் தேங்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் குடியிருப்பு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தெருச்சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, குடியிருப்பு மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது: தனிநபர் நிலத்திற்கு மழைநீர் வருவதை தடுக்க, கால்வாய்களில் சவுடு மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், அதிக மழைபொழிவின்போது கால்வாயில் மழைநீர் செல்லவில்லை என்றால், குடியிருப்புகளை சூழும் நிலை ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.