மழைநீர் வடிகால்வாய் பணி மந்தம்: ஊத்துக்கோட்டை சாலையில் நெரிசல்
திருவள்ளூர்: திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில், மழைநீர் வடிகால்வாய் பணி மந்தமாக நடந்து வருவதால், அப்பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம், தற்போது ஊத்துக்கோட்டை சாலை, வேடங்கிநல்லுாரியில் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக, சென்னை, ஸ்ரீபெரும்புதுார், ஆவடி, செங்குன்றம், திருத்தணி உட்பட அனைத்து பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அருகில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் மழைநீர் செல்லும் வகையில் வடிகால்வாய் அமைக்கும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்பணி, மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதன் காரணமாக, புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் செல்லும் வாகனங்களும், மழைநீர் வடிகால்வாய் பணி நடக்கும் இடத்தில் சந்திக்க நேரிடுகிறது. அப்போது, சாலையின் இருபுறமும் வாகன நெரிசல் அதிகரித்து போக்குவரத்து பாதிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வடிகால்வாய் பணியை விரைந்து முடித்து, ஊத்துக்கோட்டை சாலையில் நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.