கலெக்டர் வளாகத்தில் வேலி அகற்றம் கால்நடைகள் மீண்டும் நுழைய வாய்ப்பு
திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. அதே வளாகத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, எஸ்.பி., அலுவலகம் மற்றும் அவரது வீடு, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயில் உட்பட, நான்கு பாதைகள் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்கின்றன. இந்த வழியாக, பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பிற அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் சென்று வந்தனர்.இந்நிலையில், இரவு நேரத்தில் கால்நடைகளும், அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்த சிலர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். சில மாதங்களுக்கு முன், கலெக்டர் அலுவலகத்தில் பிரதான நுழைவு வாயிலை தவிர்த்து, மற்ற மூன்று இடங்களிலும் இரும்பு கேட் அமைக்கப்பட்டது.மேலும், கால்நடைகள் வராத வகையில், சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இரும்பு கேட் அமைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வேலிகளை அகற்றிவிட்டு, பாதையாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், கலெக்டர் அலுவலகத்திற்குள் மீண்டும் கால்நடைகள் நுழையும் அபாயம் உள்ளது. மேலும், வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் திருடு போகும் ஆபத்து உள்ளதாக, ஊழியர்கள் அச்சம் தெரிவித்தனர்.எனவே, கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் அகற்றப்பட்ட இரும்பு வேலியை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.