மெதுார் - விடதண்டலம் சாலைக்கு விமோசனம் ரூ.3.95 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்
பொன்னேரி,பொன்னேரி அடுத்த, மெதுார் கிராமத்தில் இருந்து, அரசூர் செல்லும் சாலையில், மேலப்பட்டறை, கொள்ளுமேடு, கொக்குமேடு, அண்ணாநகர், விடதண்டலம், விடதண்டலம் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன.இதில், மெதுார் - விடதண்டலம் இடையேயான, 3.5 கி.மீ., சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மெதுார், பொன்னேரி வந்து செல்லும் சூழ்நிலை உள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மழை பெய்தால், சாலைப் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருந்த இந்த சாலை, 2022ல், மாநில நெடுஞ்சாலைத்துறையின் இதர மாவட்ட சாலைகள் பிரிவில் சேர்க்கப்பட்டது.இரண்டு ஆண்டுகள் முடிந்தும், சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நிலையில், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலை சேதம் குறித்து, நம் நாளிதழிலும் பல்வேறு தருணங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, தற்போது, மெதுார் - விடதண்டலம் இடையேயான சாலை, 3.95 கோடி ரூபாயில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக சாலையில் மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு, ஐந்து இடங்களில் மழைநீர் செல்வதற்கு சிறுபாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.கிராமவாசிகளின் தொடர் பேராட்டங்களின் பயனாக மெதுார் - விடதண்டலம் சாலைக்கு விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளதை எண்ணி அவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.