உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணி நிறைவு ரயில்களின் சேவை மீண்டும் துவக்கம்

விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணி நிறைவு ரயில்களின் சேவை மீண்டும் துவக்கம்

திருவள்ளூர்,திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு, தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி முடிந்ததால், விரைவு, மின்சார ரயில்களின் சேவை நேற்று மீண்டும் துவங்கியது.சென்னை துறைமுகத்தில் இருந்து, 52 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயில், நேற்று முன்தினம் அதிகாலை, வாலாஜா ரோடு ஸ்டேஷன் நோக்கி சென்று கொண்டிருந்தது.அந்த ரயில், 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிய நிலையில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக மூன்றாவது டேங்கர் பெட்டி தடம்புரண்டதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மெதுவாக இயக்கம்

அடுத்தடுத்து, 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின. இதனால், சென்ட்ரல் - அரக்கோணம் இடையே, 70 ரயில்களின் சேவை நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து, 600 மீட்டர் துாரத்துக்கு சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் மேல்நிலை மின் கம்பங்கள், மின் கம்பிகளை சீரமைக்கும் பணிகள், நேற்று முன்தினம் மாலை துவங்கி, நள்ளிரவு வரை நடந்தது.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் ஒரு பாதை சீரமைக்கப்பட்டு, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயில் இயக்கப்பட்டது. பின், 2வது பாதையில் நள்ளிரவு 12:47 மணி அளவில் சென்ட்ரல் - ஏற்காடு விரைவு ரயில் இயக்கப்பட்டது.நேற்று மாலை வரையில் இந்த இரு பாதைகளிலும், ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. பின்னர், மாலையில், மூன்றாவது பாதையிலும் ரயில்கள் இயக்கப்பட்டன.சென்னையில் இருந்து பெங்களூரு, கோவை, மைசூர் செல்லும் விரைவு ரயில்களும், சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் செல்லும் ரயில்களின் சேவை நேற்று மீண்டும் துவங்கியது.

பயணியர் அவதி

இருப்பினும், அனைத்து விரைவு, மின்சார ரயில்களும் காலஅட்டவணைப்படி ஓடவில்லை. மேலும், சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் இடையே இயக்க வேண்டிய மின்சார பாஸ்ட் ரயில்களும் இயக்கப்படவில்லை. வழக்கமான விரைவு, மின்சார ரயில்கள் அனைத்தும், 30 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்தன. நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணிக்கு முதல் பாதை சீரானது.அடுத்தடுத்து, நேற்று மாலை வரை மூன்று பாதைகளும் தயாராகி, பல்வேறு கட்ட சோதனை நடத்தி, மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள ஒரு பாதையிலும், விரைவில் ரயில் இயக்கப்படும். நேற்று நிலவரப்படி, பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், சிறுதி தாமதமாக இயக்கப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தண்டவாள விரிசல்

இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர், பிரதாப் கூறியதாவது:திருவள்ளூரில் நடந்த சரக்கு ரயில் விபத்திற்கு, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே காரணம் என, தெரிகிறது. இன்ஜின் மற்றும் அதையடுத்த டேங்கர் கடந்ததும், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே, அதன் பின் வந்த டேங்கர் சக்கரம் உராய்வு ஏற்பட்டு, தடம் புரண்டது. அதற்கடுத்து வந்த டேங்கர்களும், நிலை தடுமாறி தடம் புரண்டுள்ளன.இதுகுறித்து, ரயில்வே துறையினருக்கு விளக்கம் கேட்டுள்ளோம். சென்னை கோட்ட மேலாளர் தலைமையில், விசாரணை குழு அமைத்து, அவர்களிடம் விளக்கம் பெற வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

'கேட் கீப்பர்'கள் சஸ்பெண்ட்: டி.ஆர்.இ.யு., கண்டனம்

அரக்கோணம் --- செங்கல்பட்டு ரயில் தடத்தில், இரண்டு 'கேட் கீப்பர்'கள் விசாரணையின்றி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதற்கு, டி.ஆர்.இ.யு., கண்டனம் தெரிவித்துள்ளது.கடலுார் மாவட்டம், செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது, பயணியர் ரயில் மோதிய சம்பவத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 'லெவல் கிராசிங் கேட்'களை தினமும் ஆய்வு செய்வது உள்பட பல்வேறு உத்தரவுகளை, ரயில்வே துறை பிறப்பித்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், அரக்கோணம் -- செங்கல்பட்டு தடத்தில், கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தியபோது, திருமால்பூர் அருகில் இரவு பணியின்போது இரண்டு கேட்மேன்கள், துாங்கியதாக கூறி, இருவரையும் பணியிடை நீக்கம் செய்தனர். இதற்கு, டி.ஆர்.இயு., எனப்படும் தட்ஷிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தண்டவாளம் விரிசலே விபத்துக்கு காரணம்

திருவள்ளூரில் நடந்த சரக்கு ரயில் விபத்திற்கு, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே காரணம் என, தெரிகிறது. இன்ஜின் மற்றும் அதையடுத்த டேங்கர் கடந்ததும், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே, அதன் பின் வந்த டேங்கர் சக்கரம் உராய்வு ஏற்பட்டு, தடம் புரண்டது. அதற்கடுத்து வந்த டேங்கர்களும், நிலை தடுமாறி தடம் புரண்டுள்ளன.இதுகுறித்து, ரயில்வே துறையினருக்கு விளக்கம் கேட்டுள்ளோம். சென்னை கோட்ட மேலாளர் தலைமையில், விசாரணை குழு அமைத்து, அவர்களிடம் விளக்கம் பெற வலியுறுத்தி உள்ளோம்.மு.பிரதாப், கலெக்டர், திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ