கொட்டும் மழையிலும் மின் விளக்குகள் சீரமைப்பு
திருத்தணி: பழுதடைந்த சாலையோர மின் விளக்குகளை கொட்டும் மழையிலும் நகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர். திருத்தணி நகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலையோரங்களில், 200க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தி பராமரித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த பலத்த மழை மற்றும் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக, 50க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமத்துடன் சென்று வந்தனர். இதையடுத்து திருத்தணி நகராட்சி நிர்வாகம் பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைத்தனர். திருத்தணி நகராட்சி எல்லை ஆரம்பத்தில் உள்ள நந்தியாற்றின் உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் சேதமடைந்த, 15 மின் விளக்குகளை கொட்டும் மழையிலும் நகராட்சி ஊழியர்கள் நேற்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மழையை பொருட்படுத்தாமல் மின் விளக்குகளை சீரமைத்த நகராட்சி ஊழியர்களை வாகன ஓட்டிகள், மக்கள் பாராட்டினர்.