உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி - சென்னை சென்டரல் இடையே கூடுதல் மின்சார ரயில் இயக்க வேண்டுகோள்

திருத்தணி - சென்னை சென்டரல் இடையே கூடுதல் மின்சார ரயில் இயக்க வேண்டுகோள்

திருத்தணி: திருத்தணி - சென்னை சென்டரல் இடையே, கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, திருத்தணி ரயில்வே பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், ஆவடி, அம்பத்துார் மற்றும் சென்னை சென்டரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு, தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். அதிகளவில், வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சென்னைக்கு ரயில்கள் மூலம் தான் சென்று வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அதிகாலை 4:30 மணி முதல், காலை 8:30 மணி வரை, மின்சார ரயில் மூலம் சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், திருத்தணியில் இருந்து, போதுமான அளவு மின்சார ரயில்கள் இயக்கப்படுவதில்லை. அதாவது, அதிகாலை 4:30 மணி, காலை 5:40, 6:30, 7:00, 8:40 மணிக்கு மட்டுமே சென்னை சென்டரல், கடற்கரை ஆகிய இடங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் பின், காலை 10:15 மணி, மதியம் 12:40 மணி, மாலை 2:40, 3:45, 5:00 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதனால், சில நேரங்களில், மின்சார ரயிலுக்காக, இரண்டரை மணி நேரத்திற்கும் மேல், திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதே, 13 கி.மீ., துாரத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து, அரை மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில் வீதம், சென்னை சென்டரல், கடற்கரைக்கு இயக்கப்பட்டு வருகிறது. எனவே, திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !