பொன்னேரி தாலுகாவில் 202 வருவாய் கிராமங்கள் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க கோரிக்கை
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்திலேயே, 202 வருவாய் கிராமங்களுடன், பெரிய தாலுகாவாக உள்ள பொன்னேரியை, நிர்வாக வசதிகளுக்காக இரண்டாக பிரித்து, சோழவரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிதாக உருவாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரி, மீஞ்சூர், காட்டூர், திருப்பாலைவனம், சோழவரம், ஞாயிறு, ஆரணி, கோளூர், செங்குன்றம் என, ஒன்பது குறுவட்டங்களில், 202 வருவாய் கிராமங்களுடன், மாவட்டத்திலேயே பெரிய தாலுகாவாக பொன்னேரி உள்ளது. பழவேற்காடு, செங்குன்றம், காட்டுபள்ளி என, இதன் சுற்றளவு, 25 கி.மீ., பரப்பில் உள்ளது. இதில், செங்குன்றம், சோழவரம் குறுவட்டங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு சான்று, அரசின் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக, பொன்னேரி தாலுகா அலுவலகம் வந்து செல்ல, 20 - 25 கி.மீ., பயணிக்கின்றனர். குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தங்கள் மனுவின் நிலை குறித்து அறிய, பொன்னேரி சென்று வருவதற்கு பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். நீண்ட துாரம் பயணித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தேடி வரும்போது, அவர்கள் களப்பணிக்கு சென்றிருப்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதேபோல, அதிகாரிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மழைக்காலங்களில், புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கும்போது, கரையோர பகுதிகளை கண்காணிப்பது, மக்களை பாதுகாப்பது, பாதிக்கப்படுபவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். அதேசமயம், மாவட்டத்தின் மொத்த வெள்ளநீர் வடியும் பகுதிகளாக பொன்னேரி, பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி ஆகியவை அமைந்துள்ளதால், அதிகாரிகள் அங்கிருந்தும் கண்காணிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இருவேறு திசைகளில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது, நிர்வாக ரீதியாக அதிகாரிகளும், அலுவலர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாவட்டத்தில் பெரிய தாலுகாவாக பொன்னேரி இருப்பதால், அதிகாரிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மக்களின் அலைகழிப்பை தவிர்க்க, நிர்வாக வசதிக்காக பொன்னேரி தாலுகாவை இரண்டாக பிரித்து, சோழவரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.