ஆரணி ஆற்றின் பாலத்தில் தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல், 2021ம் ஆண்டு, 27.8 கோடி ரூபாயில், மத்திய சாலை நிதி திட்டத்தில் பாலம் கட்டப்பட்டது. இது, 450 மீட்டர் துாரம், 15 மீட்டர் அகலத்தில், இரண்டு பக்கமும், 1.5 மீட்டர் அகலத்தில் பாதசாரிகள் செல்ல சாலை உள்ளது.இதன் வழியே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், திருவள்ளூரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு செல்கின்றனர்.இதேபோல, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, காளஹஸ்தி, வரதயபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த பாலத்தை கடந்து ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றனர். தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் இந்த பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், தங்களின் வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தில் செல்கின்றனர். வெளிச்சம் இல்லாததால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.