சுண்ணாம்புக்குளம் புறக்காவல் நிலையம் முழுநேரமும் செயல்பட கோரிக்கை
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையம் முழு நேரமும் செயல்படுத்தி குற்ற சம்பவங்களை கண்காணிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புக்குளம் பஜார் பகுதி என்பது, சுற்றியுள்ள ஏழு மீனவ கிராமங்கள் உட்பட, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாட தேவைக்கு வந்து செல்லும் முக்கிய சந்தை பகுதியாகும். ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புக்குளம் பகுதி, போலீஸ் நிலையத்தில் இருந்து, 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவசர தேவைக்கு போலீசார் வந்து செல்ல முடியாத துாரம் என்பதால், சுண்ணாம்புக்குளம் பஜார் பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், 18 ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள பேருந்து நிலையம் அருகே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. முதல் நான்கு ஆண்டுகள், அந்த புறக்காவல் நிலையம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. அப்போது, சுண்ணாம்புக்குளம் பஜார் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. அதன்பின் அந்த புறக்காவல் நிலையம் கேட்பாரற்ற நிலைக்கு போனதால், 12 ஆண்டுளாக கிடப்பில் உள்ளது. கடலோர பாதுகாப்பு ஒத்திகை, சுனாமி ஒத்திகை, அரசு விழாக்கள் போன்ற நேரங்களில் மட்டுமே அந்த புறக்காவல் நிலையம் திறக்கப்படுகிறது என மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, சுண்ணாம்புக்குளம் பகுதியில், குடிகாரர்களின் அட்டகாசம், அடிதடி, தகராறு ஆகியவை அதிகரித்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். சுண்ணாம்புக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களின் நலன் கருதி, புறக்காவல் நிலையத்தில் போதிய போலீசார் நியமித்து, முறையாக செயல்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.