செங்குன்றத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. தமிழக - ஆந்திர எல்லையில் இவ்வூர் உள்ளதால், ஆந்திர மாநில மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.இங்கிருந்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள், வெளியூர்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது போக்குவரத்திற்கு அரசு பேருந்துகளை நம்பி உள்ளனர்.விழுப்புரம் கோட்ட அரசு பணிமனையில் உள்ள, 35 பேருந்துகள் இருந்து, 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படுவதால், உள்ளூர் மக்கள் பேருந்து இன்றி அவதிப்படுகின்றனர்.பாடியநல்லுார் மாநகர பேருந்து பணிமனையில் இருந்து, ஊத்துக்கோட்டை - செங்குன்றம் இடையே, 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், மாணவர்கள், பொதுமக்கள் படிக்கட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது.எனவே, இந்த மார்க்கத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பகுதியினர், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.