பஞ்செட்டி கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:பஞ்செட்டி அகத்தியர் தீர்த்த குளத்தை பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கவரைப்பேட்டை அடுத்த, பஞ்செட்டியில், ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள சுயம்பு லிங்கத்தை, அகத்திய முனிவர் பல காலமாக வழிபாடு செய்ததால், அகத்தீஸ்வரர் என, பெயர் ஏற்பட்டது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், அந்த கோவிலின் கிழக்கு பகுதியில் பரந்து விரிந்து காணப்படும், அகத்தியர் தீர்த்த குளம் உள்ளது. அகத்திய முனிவர் அறிவுறுத்தலின்படி, குளத்தில் மூழ்கி, சிவனை வழிபடுபவர்கள், சாப விமோசனம் பெறுவதாக ஐதீகம்.அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க அகத்தியர் தீர்த்தக் குளம், பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று உள்ளது. பராமரிப்பு இன்றி சுவர்கள் இடிந்து விழும் நிலையில் சாய்ந்துள்ளன. துார் வாரப்படாததால், குளத்தின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் புதர்கள் மண்டியுள்ளன.ஹிந்து சமய அறநிலையத்துறையினர், அழிந்து வரும் அகத்தியர் தீர்த்த குளத்தை புனரமைத்து புத்துயிர் அளித்து எப்போதும் துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, ஆன்மிக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.