சிறுபுழல்பேட்டை சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:புதுகும்மிடிப்பூண்டி - சிறுபுழல்பேட்டை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் இருந்து சிறுபுழல்பேட்டை கிராமம் வரையிலான, 3 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலையை புதுகும்மிடிப்பூண்டி, கரும்புக்குப்பம், முத்துரெட்டிகண்டிகை, சிறுபுழல்பேட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில், 15க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறுகலான, 12 அடி அகல சாலையில், கனரக வாகனம் சென்றால், எதிரே வரும் வாகனம் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து பாதித்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சமயங்களில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, புதுகும்மிடிப்பூண்டி - சிறுபுழல்பேட்டை சாலையை விரிவாக்கம் செய்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.