புளிய மரங்களை ஏலம் விடாததால் நெ.சா.துறைக்கு வருவாய் இழப்பு
திருவாலங்காடு திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து கூடல் வாடி வரை, 50க்கும் மேற்பட்ட புளியமரங்களில், காய்கள் காய்த்துள்ளன. இந்த புளியம் பழத்திற்கு சுவை அதிகம் என்பதால் கடும் கிராக்கி இருந்து வந்தது.அவ்வப்போது ஏலம் விடப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை வருவாய் ஈட்டி வந்தது. சாலை விரிவாக்கம், சரிவர பராமரிப்பு இல்லாததால், பல கிராமங்களில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த புளிய மரங்கள் வெட்டப்பட்டன. சில மரங்கள் பட்டுப் போயின.பெரும்பாலான இடங்களில் மரங்கள் இன்றி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. திருவாலங்காடு, கூடல்வாடி, மஞ்சாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் புளிய மரங்களில் அதிகளவில் காய்கள் காய்க்கும். அதிக மரங்கள் இல்லாததால் ஏலம் விடுவதில் சுணக்கம் ஏற்பட்டது. இதை கண்டும், காணாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விட்டு விடுகின்றனர்.பல்வேறு இடங்களில் புளியம் பழங்கள் கொத்து கொத்தாக தொங்குகின்றன. பலத்த காற்றடித்தால் புளியம் பழங்கள் தானாக கீழே விழுந்து, வாகனங்களில் நசுங்கி எதற்கும் பயன்படாமல் வீணாகி வருகிறது.எனவே, புளிய மரங்களை ஏலம் விட்டால் பயனுள்ளதாக இருக்கும். இதனால், நெடுஞ்சாலைத் துறைக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.