கடம்பத்துாரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.71 கோடி மோசடி
திருவள்ளூர்:கடம்பத்துாரில் ஏலச்சீட்டு நடத்தி, 1.71 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர், 50; காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லத்துார் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். இப்பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில், 2022 செப்டம்பர் மாதம் முதல் பணம் செலுத்தி வந்தேன். இதில், 9.46 லட்சம் ரூபாய் செலுத்தினேன். அதேபோல், எங்கள் பகுதியைச் சேர்ந்த 28 பேர் பணம் செலுத்தினர். மொத்தம் செலுத்திய 1.71 கோடி ரூபாயை திருப்பி தராமல் கவிதா ஏமாற்றி வருகிறார். எனவே, ஏலச்சீட்டு பணத்தை மீட்டு, கவிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற ஏ.டி.எஸ்.பி., ஹரிகுமார், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.