இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.29 லட்சம் மாயம்
மதுரவாயல்:வானகரம், போரூர் கார்டனைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 62. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகள் சுருதி வர்ஷினி, இதய நோய் காரணமாக அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தந்தை வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டு கார் ஓட்டுநர், பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 32.மருத்துவ சிகிச்சைக்காக, அவ்வப்போது வேலுாரில் உள்ள மருத்துவமனை சென்று வந்தபோது, சுருதி வர்ஷினிக்கு, ஓட்டுநர் கார்த்திக் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.சுருதிவர்ஷினிக்கு ஆறுதலாக பேசுவதுபோல் நடித்து, பல தவணையாக அவரிடம் இருந்து 29.58 லட்சம் ரூபாய் மற்றும் 3 சவரன் தங்க நாணயங்களை, கார்த்திக் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி, சுருதி வர்ஷினி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.மகளின் வங்கி கணக்கை திருநாவுக்கரசு பார்த்தபோது, சுருதி வர்ஷினியிடம் இருந்து கார்த்திக் வங்கி கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியது தெரிந்தது. இதுகுறித்து கேட்டபோது, பணம் தருவதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனால், பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இதையடுத்து, மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, கார்த்திக்கை நேற்று, போலீசார் கைது செய்தனர்.