நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் கடம்பத்தூர் திருவாலங்காடு திருத்தணி பள்ளிப்பட்டு உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. நவரை பருவத்தில், 11,767 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதன்படி 70 ஆயிரத்து 230 டன் நெல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர், நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர். நெல் கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து பட்டா நகல் மற்றும் சிட்டா நகல் வி.ஏ.ஓ., சான்று பெற்று, இத்தகவலை இ-டி.பி.சி., மென்பொருள் வாயிலாக, கொள்முதல் நிலைய பணியாளர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும், விவசாயிகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பெருவிரல் கைரேகை பதிவு மூலம், தங்கள் நெல்லை விற்பனை செய்யலாம். அவ்வாறு இயலாத பட்சத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மூலம், ஓ.டி.பி., எண் வரப்பெற்றவுடன், நெல்லை விற்பனை செய்யலாம்.கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, அந்த படிவத்தை வி.ஏ.ஓ., ஒப்பம் பெற்று, விபரங்களை கொள்முதல் கையடக்க கருவியில், அலுவலக பணியாளர்கள் உதவியுடன் www.tncsc--edpc.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ளீடு செய்து கொள்முதல் செய்வர்.நெல் கொள்முதலுக்குரிய தொகை, சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம், நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில், நெல் விற்பனை செய்யும் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வோர் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பாலான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நடத்துவதால் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதன்படி அவர்கள் மூட்டைக்கு 50--- --70 ரூபாய் வரை வசூலிப்பதாகவும், புரோக்கர்கள் வாயிலாக மாற்று இடத்தில் உள்ள நெல் விற்பனை செய்யப்படுவதாகவும், நெல் அறுவடை செய்யும் முன்பே பதிவு நடப்பதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும் ஆவணங்களை பதிவு செய்ய விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் அளிக்கும் போது, அவர்கள் அலட்சியப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறதுஇதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விவசாயிகள் புகார் தெரிவிக்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்கிறோம். இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
விவசாயிகள் என்ற பெயரில் ஆளும்கட்சியை சேர்ந்த கிளை, ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருக்கும் நபர்களை, நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த அனுமதி அளித்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து, 40 கிலோ நெல் மூட்டைக்கு 65 --- 75 ரூபாய் வரையில் வசூலிக்கின்றனர். நெல் துாற்றுவோர், நெல் மூட்டை ஏற்றுவோர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் போக்குவரத்து செலவு, அரசியில் கட்சியினருக்கு நன்கொடை என, பலவிதமாக கணக்கீடு செய்து, வசூலித்து வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றிய விவசாயிகள்
செலவு ரூ. 32; லாபம் ரூ.38
ஒரு மூட்டை நெல் சுத்தம் செய்து ஏற்ற 22 ரூபாய், கிடங்கில் இறக்க 10 ரூபாய் என, 32 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர். அதே நெல் மூட்டைக்கு ஒரு விவசாயிடம் இருந்து, நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் அரசியல் கட்சியினர் 70 ரூபாய் வரையில் வசூலிக்கின்றனர். கூலியாட்களுக்கு கொடுத்தது போக, மீதம் 38 ரூபாய் நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் அரசியல் கட்சிகாரருக்கு லாபமாக நிற்கிறது. சமூக ஆர்வலர்கள்