உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாய பயன்பாட்டிற்கான 3 பேஸ் லைனுக்கு... தனி வழித்தடம்; பணிகளை அரசு முடுக்கிவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாய பயன்பாட்டிற்கான 3 பேஸ் லைனுக்கு... தனி வழித்தடம்; பணிகளை அரசு முடுக்கிவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாலங்காடு:விவசாய பயன்பாட்டுக்கான மும்முனை மின் இணைப்பு வழித்தடம் தனியாக ஏற்படுத்தப்பட்டு வருவதால், தடங்கல் இல்லா மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனால், விளைச்சலும் பல மடங்கு பெருகும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மின் வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுக்க, 23.55 லட்சம் விவசாய மின் இணைப்பு கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, திருமழிசை ஆகிய மூன்று கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, கடை, வணிக நிறுவனங்கள் என, 3.10 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. 50,000க்கும் மேற்பட்ட விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மூன்று கோட்டத்திற்கு உட்பட்டு, 20 மின் வினியோக மையங்களும், 4,500க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப் படுகின்றன. புதிதாக வீடு கட்டுவோர், தற்காலிக மற்றும் நிரந்தர மின் இணைப்பு கோரி, தங்கள் பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து, பணம் செலுத்தி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் வீடுகள், விவசாயம், தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில்கள், அங்காடிக் கடை, வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும், ஒரே மின் வழித்தடத்தில், மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கோடைக்காலத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச சிரமம் உள்ளதால், தனி வழித்தடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தனி வழித்தடம் அமைக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து திருவாலங்காடை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: அன்றாடம் விவசாய பணிகளுக்கு, 14 மணி நேரம் மும்முனை இணைப்பும், மீதமுள்ள 10 மணி நேரம் இருமுனை இணைப்பு மின்சாரமும், மற்ற மின் இணைப்புகளுக்கு, 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள பல்வேறு கிராமங்களில், பல மணி நேரம் இருமுனை மின் வினியோகம் செய்வதால், அவ்வழித்தடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற் கூடங்களுக்கு குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு, அங்குள்ள மின் சாதனங்கள், இயந்திரங்கள் பழுதாகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விவசாயத்துக்கு செல்லும் மும்முனை மின்சாரத்திலும், குடியிருப்பு, அலுவலகம் உள்ளிட்ட பயன்பாட்டிற்கான மின்சாரத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி, ஒரே மாதிரி மின்வினியோகம் செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும். தற்போது வழங்கப்படும், 14 மணி நேரத்துக்கான மின்சாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மீதமுள்ள, 10 மணி நேரத் துக்கு இருமுனை மின்சாரம் மட்டும் கிடைக்கிறது. அதை மும்முனையாக வினியோகிக்க வேண்டும். மத்திய அரசின் மறுசீரமைப்பு மின் வினியோக திட்டத்தின் கீழ், தமிழகத்தில் விவசாயத்துக்கு, தனி வழித்தடத்தில் மின் வினியோக பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பூர்வாங்க பணிகள் முடிந்து விவசாயத்திற்கு தனி வழித்தடம் அமைக்கும் பணிகள் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டத்தின் கீழ், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக துவக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்ட கோட்டத்தில் பணிகள் விரைவாக நடக்கின்றன. மற்ற கோட்டங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் காலங்களில் மின்னழுத்த பிரச்னை ஏற்படாது. மின் இழப்பு குறையும். தற்போது, விவசாய பகுதிகளுக்கிடையே இருக்கும் குடியிருப்புகளுக்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான நடவடிக்கையை, மின்வாரிய பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தனி வழித்தடம் அமைப்பதால், வருங்காலங்களில் தடங்களின்றி மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. - கோட்ட மின்வாரிய பொறியாளர், திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை