கடைகள், வணிக, தொழில் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில், மே 1ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழிற் நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரி போன்ற நிறுவனங்களில் தமிழில் கட்டாயம் பெயர் பலகை நிறுவப்பட வேண்டும்.அப்பெயர் பலகையில் முதலில் தமிழ் மொழி பிரதானமாக பெரிய அளவில் இடம்பெற வேண்டும். இரண்டாவது ஆங்கில மொழியிலும், தேவையென்றால் மூன்றாவதாக வேறு மொழிகளிலும் பெயர் பலகை அமைத்து கொள்ளலாம்.மே 1ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் படி அபராதம் விதிக்கப்படும்.அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், தங்களின் அதிகார வரம்புக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.