வாடகையை குறைத்து ஒப்பந்தம் போடுவதா? லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
மீஞ்சூர், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், பாரத் பெட்ரோலிய முனையம் உள்ளது. இங்கிருந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குகள் மற்றும் விமான நிலையங்களுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்படுகிறது.இதற்காக, 150 லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மேற்கண்ட லாரி உரிமையாளர்கள், பாரத் பெட்ரோலிய நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய வாடகை ஒப்பந்த நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:கடந்த 2021ல் ஒப்பந்தம் போடப்பட்டு, 1 கி.மீ.,க்கு 3.60 ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. தற்போது, பாரத் பெட்ரோலிய நிறுவனம், புதிய வாடகை ஒப்பந்தம் கொண்டு வந்துள்ளது.அதன்படி, தற்போது வழங்கப்படும் வாடகையில் இருந்து, 15 சதவீதம் அதாவது 3.0௬ ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 100 கி.மீ., 200கி.மீ., என, தொலைவிற்கு ஏற்பவும் வாடகை நிர்ணயம் செய்துள்ளது. இதுகுறித்து கேட்டால், நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும், காவல் துறையை வைத்து அச்சுறுத்துகிறது.இந்த வாடகை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், எங்கள் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். மற்ற எண்ணெய் நிறுவனங்களின் லாரி உரிமையாளர்களுடன் பேசி, போராட்டத்தை விரிவுபடுத்துவோம்.அதேபோல, பெட்ரோல் பங்க் வைத்துள்ள டீலர்களிடம் பேசி ஒத்துழைக்க கோருவோம். விமான நிலையத்திற்கு செல்லும் பெட்ரோல் டேங்கர் லாரிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு செல்லும் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் விமான நிலைங்களுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.