சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.2.73 கோடியில் புதிய கட்டடம்
பொன்னேரி:பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, 2.73 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்ட நேற்று, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில், ஆங்கிலேயர் கால பழமையான கட்டடத்தில், 1865ம் ஆண்டு முதல் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு, சொத்து பரிமாற்றங்களுக்கான பத்திரப்பதிவு, நகல் பத்திரம், அடமானம் பத்திரப்பதிவு, பாகப்பிரிவினை, வில்லங்கச்சான்று, பிறப்பு - இறப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் நடக்கின்றன. சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படும் கட்டடம் சேதமடைந்ததால், ஆவணங்களை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. அதுவரை, பொன்னேரி - தச்சூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம், பெருமாள் நகர் பகுதிக்கு, கடந்த மாதம் தற்காலிகமாக சார் - பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, புதிய அலுவலகம் கட்டுவதற்காக, 2.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்டடம், தரை மற்றும் முதல்தளம் என, 4,562 சதுர அடி பரப்பில் அமைகிறது. அதற்கான கட்டுமான பணிகள், நேற்று பூமி பூஜையுடன் துவங்கப்பட்டன. இந்த விழாவில், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.