சோதனை சாவடியில் சிக்கிய ஆறு பேர் கைது
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. வங்கனுார், ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆள் இல்லாத வீடுகளில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனாலும் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆர்.கே.பேட்டை அடுத்த புதுார் மேடு சோதனை சாவடியில் ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் எஸ்.ஐ., ராக்கிகுமாரி உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட ஆறு பேரை சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருத்தணி உட்பட பல்வேறு காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிந்தது.அரக்கோணம் அடுத்த பாராஞ்சி காலனியை சேர்ந்த சுதன், 27, தமிழ்செல்வி, 27, அஜித்குமார், 31, பாராஞ்சியை சேர்ந்த சந்தோஷ்குமார், 29 மற்றும் ஊத்துக்கோட்டையை சேர்ந்த நாகேஷ், 22 உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிசி மூட்டை, காஸ் சிலிண்டர், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் மொபைல் போன், 23 சவரன் தங்க கட்டி, 400 கிராம் வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.