உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகர சபை சிறப்பு கூட்டம் நாளை முதல் 3 நாள் நடக்கிறது

நகர சபை சிறப்பு கூட்டம் நாளை முதல் 3 நாள் நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மாநகர, நகர மற்றும் பேரூராட்சி வார்டுகளில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம சபை போல், மாநகர, நகர மற்றும் பேரூராட்சி சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நகர்மன்ற உறுப்பினர் தலைமையில், நகராட்சி அலுவலர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்புடன் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம், நாளை முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதில், குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை சீரமைப்பு, பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் குறித்து விவாதிக்கப்படும். நகராட்சி பகுதிகளை பசுமையாக்கும் வகையில், தனியார் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்களை தனியார் ஒத்துழைப்புடன் பராமரித்தல், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும். அதன்படி, ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி, திருத்தணி, திருநின்றவூர் மற்றும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருமழிசை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பேரூராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கையை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி