மதிய உணவு சாப்பிட 1 கி.மீ., பயணிக்கும் மாணவர்கள்: பெற்றோர் அதிருப்தி பெற்றோர் அதிருப்தி
பள்ளிப்பட்டு: விடுதியில் தங்கி அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், மதிய உணவுக்காக பள்ளியில் இருந்து விடுதிக்கு வந்து செல்ல, வாகனங்களில் 'லிப்ட்' கேட்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளிப்பட்டு ஒன்றியம் பொம்மராஜிபேட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், பொம்மராஜிபேட்டை, ஸ்ரீகாவேரிராஜிபேட்டை, கீளப்பூடி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு, விடுதியில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்களும் உள்ளனர். மாணவர் விடுதி, பொம்மராஜிபேட்டையில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில், 1 கி.மீ.,யில் அமைந்துள்ளது. மதிய உணவு இடைவேளையின் போது விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், பள்ளியில் இருந்து விடுதிக்கு நடந்து சென்று உணவு சாப்பிட்டு வருகின்றனர். மீண்டும் பள்ளிக்கு திரும்ப போதிய நேரம் இல்லாததால், அந்த வழியாக செல்லும் வாகனங்களில், லிப்ட்' கேட்டு பயணிக்கின்றனர். கனரக வாகன ஓட்டிகளும், மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு கனிவுடன் அவர்களை ஏற்றி செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிப்பதும், டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பாதுகாப்பின்றி பயணிப்பதாலும், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். எனவே, விடுதி மாணவர்களுக்கு மதிய உணவு, பள்ளியிலேயே வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.