பொங்கலுக்காக ஊருக்கு திரும்பும் கரும்பு வெட்டு தொழிலாளர்கள்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் நெல் மற்றும் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. கரும்பு சாகுபடியில், ஒரு முறை நடவு செய்தால், மூன்று முறை அறுவடை செய்ய முடியும் என்பது சிறப்பு. இதனால், விதை நடவு செலவு குறையும். நீண்ட கால பயிர் என்பதாலும் விவசாயிகள் கரும்பு பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர்.அதே நேரத்தில், அறுவடை பணி மிகவும் சிக்கலானது. கரும்பு வெட்டு தொழிலாளர்களுக்கு உள்ளூரில் கடும் கிராக்கி உள்ளது. இதனால், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கரும்பு வெட்டு பணிக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.இவர்கள், பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் 3 - 5 மாதங்கள் வரை முகாமிட்டு கரும்பு வெட்டு தொழிலில் ஈடுபடுகின்றனர்.மூன்று மாதங்களாக கரும்பு வெட்டு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, பள்ளிப்பட்டில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல துவங்கியுள்ளனர்.பொங்கலுக்கு பின், மீண்டும் கரும்பு வெட்டு பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். வரும், மார்ச் மாதம் வரை, கரும்பு சீசன் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.