உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 63,000 ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

திருத்தணியில் 63,000 ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

திருத்தணி : திருத்தணி கோட்டத்தில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள், செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கால்நடை துறையின் வாயிலாக, ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும்.அந்த வகையில், நடப்பாண்டிற்கான தடுப்பூசி நேற்று துவங்கியது. ஒரு மாதத்திற்கு, அனைத்து ஆடுகளுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்தார். உதவி இயக்குனர் கூறியதாவது:வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும். இதற்காக திருத்தணி கோட்டத்தில், 23 மருத்துவ குழுக்கள் அமைத்து, உதவி மருத்துவர் மேற்பார்வையில் கால்நடை ஆய்வாளர்கள் பராமரிப்பு உதவியாளர்கள், ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் கொண்டு தடுப்பூசி போடப்படும். 46,940 வெள்ளாடுகள், 16,060 செம்மறி ஆடுகள் என 63,000 ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.ஆட்டுக் கொல்லி நோயால் பாதித்த ஆடுகளுக்கு காய்ச்சல், வாய்ப்புண், பேதி மற்றும் நுரையீரல் சுழற்சி காணப்படும். தகுந்த நேரத்தில் தடுப்பூசி போடாமல் விட்டால், 100 சதவீதம் ஆடுகள் இறக்க நேரிடும்.ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் கிராமங்களில் தடுப்பூசி போட வரும் மருத்துவ குழுவினரிடம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ