உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இணைப்பு சாலைக்காக கோவில் மண்டபம் இடிப்பு அழிஞ்சிவாக்கத்தில் பக்தர்களிடம் பரபரப்பு

இணைப்பு சாலைக்காக கோவில் மண்டபம் இடிப்பு அழிஞ்சிவாக்கத்தில் பக்தர்களிடம் பரபரப்பு

சோழவரம்:சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அருகே, ஹிந்து அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில், சிலம்பாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு, அம்மனுக்கு வலதுபுறம் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமியும், இடதுபுறம் வலம்புரி விநாயகர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை 9 மீ., அகலம் உடையது. இதில், கோவிலின் முகப்பு பகுதியில் உள்ள மண்டபத்தின் ஒரு பகுதி, இணைப்பு சாலை அமையும் இடத்தில் இருந்தது.இணைப்பு சாலை பணிக்காக, மண்டபத்தின் ஒரு பகுதியை இடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. இதற்கு, பக்தர்கள் இடையே எதிர்ப்பு இருந்ததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பக்தர்கள், கோவில் நிர்வாகம், கிராமவாசிகள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வந்தது.நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவிலின் முகப்பு மண்டபம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.ஹிந்து அறநிலையத்துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டிருந்தனர். முதலில், கோவிலின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டன.பின், கோவில் சன்னிதிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மண்டபத்தின் ஒரு பகுதியை அகற்றுவதற்காக, பிரத்யேக சுவர் அறுக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது.இடிக்க வேண்டிய பகுதியை ஒரு முனையில் இருந்து, மறுமுனை வரை நேர்த்தியாக அறுக்கப்பட்டது. பின், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மண்டபம் இடிக்கப்பட்டது.இணைப்பு சாலை அமையும் பகுதியில் உள்ள வேப்பமரம் மற்றும் அரச மரம் ஆகியவையும் வெட்டப்பட்டன. மரத்தின் கீழ் பகுதியை வேருடன் பெயர்த்து, மாற்று இடத்தில் வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.கோவிலின் முகப்பு மண்டபம் இடிக்கப்பட்டதால், தற்போது சன்னிதிகள் இணைப்பு சாலையை ஒட்டி அமையும் நிலை ஏற்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் சாலையில் நின்று வழிபடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.கோவிலுக்கு அருகே இடம் பெற்று, புதிய கோவிலை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !