ஜல்லி கற்கள் பெயர்ந்த தாமரைக்குப்பம் சாலை
ஊத்துக்கோட்டை,:ஊத்துக்கோட்டை அடுத்து, தொம்பரம்பேடு கிராமத்தில் இருந்து, மூன்று கி.மீ., துாரத்தில் உள்ளது தாமரைக்குப்பம் கிராமம். தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.இப்பகுதி மக்கள் தங்களது கிராமத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. தொம்பரம்பேடு கிராமத்தில் இருந்து, மூன்று கி.மீ., துாரம் நடந்து தான் செல்ல வேண்டும். அவசர தேவைக்கு இப்பகுதியினர் தங்களது டூ - வீலரை நம்பி தான் உள்ளனர்.போக்குவரத்து வசதியின்றி உள்ள இப்பகுதியினர் தொம்பரம்பேடு கிராமத்தில் இருந்து நடந்து செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதனால் நடந்து செல்ல மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.குறிப்பாக, கூலி வேலைக்கு வெளியூர் சென்று விட்டு இரவு நேரங்களில் இவர்கள் தங்களது வீட்டிற்கு செல்லும் போது, இந்த சாலையில் தான் செல்ல வேண்டி உள்ளது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தொம்பரம்பேடு கிராமத்தில் இருந்து, தாமரைக்குப்பம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.