மீஞ்சூர் - சீமாவரம் சாலையில் படுமோசமான நிலையில் பாலம்
மீஞ்சூர்:மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலகம் அருகில் உள்ள ரமணா நகர், வள்ளுவர் நகர் வழியாக சீமாவரம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், கொசஸ்தலை ஆற்றில் இருந்து நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பாலம் முறையான பராமரிப்பு இன்றி சேதமடைந்து உள்ளது. பாலத்தின் மேற்பரப்பில் சரளை கற்கள் பெயர்ந்தும், உள்ளிருக்கும் கம்பிகள் வெளியில் நீட்டிக்கொண்டும் இருக்கின்றன.இதனால், பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். இரும்பு கம்பிகள், வாகனங்களில் உரசி பாதிப்பு ஏற்படுத்துகின்றன.நடந்து செல்வோர், கம்பிகளில் சிக்கி சிறு சிறு காயங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அங்குள்ள பாலத்திற்கான இணைப்பு சாலையும் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளது.பலமுறை ஒன்றிய நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், அதிகாரிகள், சிறுபாலத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என, வாகன ஓட்டிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.