ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ., பயணிக்கும் அவலம்
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுார் அண்ணாநகர் பகுதியில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, 300 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க, நாலுார் கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த ரேஷன் கடை, 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளதால், கிராமவாசிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:வயதானவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு, நீண்ட துாரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ரேஷன் கடை எப்போது திறக்கின்றனர். என்ன பொருள் வழங்குகின்றனர் என்பதுகூட தெரிந்து கொள்ள முடியவில்லை.ஒரு சில நேரங்களில் பொருட்கள் வாங்க சென்று, கடை மூடியிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. கிராமத்தில் ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.மேலும், குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்கள் கிராமத்தை அரசு புறக்கணிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.