உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேருந்து நிலையம் இல்லாததால் சாலையோரம் நிறுத்தும் அவலம்

பேருந்து நிலையம் இல்லாததால் சாலையோரம் நிறுத்தும் அவலம்

பழவேற்காடு, பழவேற்காடு மீனவ பகுதிக்கு பொன்னேரி, செங்குன்றம், கோயம்பேடு, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து, அரசு, மாநகர போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இங்கு நிலையம் இல்லாததால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், பழவேற்காடு பஜார் பகுதியில் உள்ள சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின் பயணியர் ஏறியவுடன் மீண்டும் திரும்புகின்றன.சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுவதால், மற்ற வாகனங்களுக்கு இடையூறாக அமைகிறது. ஒரு சில நேரங்களில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. சுற்றுலா பயணியர், மீன் வியாபாரிகள், பொதுமக்கள் என, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பஜார் பகுதியில் நிற்கும் பேருந்துகளால் நெரிசல் ஏற்படுகிறது.கோட்டைகுப்பம், நடுவூர்மாதகுப்பம் செல்லும் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படும் போது, மற்ற வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பேருந்துகளை திருப்புவதற்கும் இடமில்லாமல், அதன் ஓட்டுநர்களும் சிரமப்படுகின்றனர்.மேலும், சாலையில் நிறுத்தி வைக்கப்படும் பேருந்துகளால், மற்ற வாகனங்கள் எதிரெதிரே பயணிக்கும் போது, ஒன்றோடு ஒன்று உரசி கொள்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.பழவேற்காடு பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, மீனவ மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பேருந்து நிலையம் அமைப்பதற்கு தேவையான இடவசதி ஏற்படுத்தி, நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி