பூதுார் அரசு பள்ளியை சூழ்ந்த மழைநீர் ஏரி கலங்கலை சீரமைக்காததால் அவலம்
பொன்னேரி: ஏரியின் கலங்கல் பகுதியை சீரமைக்காததால், உபரிநீர் வெளியேற வழியின்றி, அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தை சூழ்ந்திருப்பதால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரியின் கலங்கல் பகுதி, ஆந்திர மாநில நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. ஏரி நிரம்பும்போது, உபரிநீர் கலங்கல் வழியாக வெளியேற வேண்டும். ஆனால், கலங்கல் பகுதியை விட சாலை உயரமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், ஏரியின் உபரிநீர் கலங்கல் வழியாக வெளியேற வழியின்றி, பூதுார் கிராமத்தில் உள்ள மதகு வழியாக வெளியேறி, அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சூழ்ந்து விடுகிறது. தற்போதும் அதே நிலை தான் தொடர்கிறது. கடந்த 15 நாட்களாக மழை பெய்யாத போதும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பூதுார் ஏரியின் கலங்கல் பகுதியை சீரமைத்து, சிறுபாலம் அமைத்தால், மழைநீர் எளிதாக செல்லும். பள்ளி வளாகத்திலும் மழைநீர் தேங்காது என, கிராம மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.