மாட்டு தொழுவமான சாலை துர்நாற்றத்தால் கடும் அவதி
திருவள்ளூர்:சென்னை, மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ., நீளச் சாலை, 2014-ம் ஆண்டு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டன. தொடர்ந்து, 2018-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.இதில், திருமழிசை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் இணைப்பு சாலை மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், மாட்டுச்சாணம் குவிந்து கிடப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால், அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, இணைப்பு சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதோடு, மழை நேரத்தில் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.