குவாரிக்கு மண் அள்ள வரும் லாரிகளால் தடப்பெரும்பாக்கம் சாலை படுமோசம்
பொன்னேரி: குவாரிக்கு சென்று வரும் லாரிகளால், தடப்பெரும்பாக்கம் - வடக்குப்பட்டு சாலை சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஏரியில், மூன்று ஆண்டுகளாக குவாரியில் இருந்து மண் அள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்ட் முதல் குவாரி செயல்படவில்லை. இந்த குவாரியில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண் அள்ளப்பட்டு, காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் சாலை திட்ட பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. லாரிகளில் அதிக சுமையுடன் மண் எடுத்து செல்லப்பட்டதால், தடப்பெரும்பாக்கம் - வடக்குப்பட்டு சாலை முற்றிலும் சேதமடைந்தது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு, அவற்றில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினமும் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: 'குவாரி காலம் முடிந்தவுடன், சாலை சீரமைக்கப்படும்' என, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான தொகையை குவாரி நிறுவனம் செலுத்தியது. மூன்று ஆண்டுகளாக இச்சாலையை சீரமைப்பதில் ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. தினமும் மக்கள் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.