கடலில் குளித்த இளைஞர் மாயம்
பழவேற்காடு:பழவேற்காடு கடற்கரை பகுதியில், நேற்று, புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் வந்து சென்றனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று மாலை, கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம், எடக்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், கிரி, 20, நண்பர்களுடன் பழவேற்காடு பழைய சாட்டன்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் குதுாகலமாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானார். இது குறித்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் கடலில் மாயமான கிரியை தேடி வருகின்றனர்.