உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதுகுப்பத்தில் சுடுகாடு வசதி இல்லை சாலையோரம் எரிக்கப்படும் சடலங்கள்

புதுகுப்பத்தில் சுடுகாடு வசதி இல்லை சாலையோரம் எரிக்கப்படும் சடலங்கள்

சோழவரம்:புதுகுப்பம் கிராமத்தில் சுடுகாடு வசதி இல்லாததால், இறந்தவர்களின் சடலங்கள் சாலையோரங்களில் வைத்து எரிக்கப்படும் அவலநிலை தொடர்கிறது. சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட புதுகுப்பம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, சுடுகாடு வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சுடுகாடு வசதி கேட்டு, பொன்னேரி வருவாய்த் துறை, தமிழக முதல்வர் தனிப்பிரிவு என, பல்வேறு தரப்பினரிடம் மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களை புதைக்கவும், எரிக்கவும் இங்குள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் தேங்கும்போது, சாலையோரங்களில் வைத்து எரிக்கும் நிலை ஏற்படுகிறது. நேற்று முன்தினம், கிராமத்தில் இறந்த முதியவர் ஒருவரின் உடல், காரனோடை - சீமாவரம் சாலையோரத்தில் வைத்து எரிக்கப்பட்டது. இதனால், அவ்வழியாக செல்வோர் அதிருப்திக்கு ஆளாகினர். எனவே, புதுகுப்பம் கிராமத்திற்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி