கொதிக்கும் எண்ணெயை கணவர் மேல் ஊற்றிய 3வது மனைவி கைது
புழல்:தாமதமாக வீட்டிற்கு வந்த கணவர் மீது, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மூன்றாவது மனைவியிடம் போலீசார் விசாரிக்கின்றனர். புழல் அடுத்த லட்சுமிபுரம் காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் காதர் பாஷா, 40. இவரது மனைவி நிலோபர் நிஷா, 38. காதர்பாஷாவிற்கு ஏற்கனவெ இரண்டு முறை திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கணவரை இழந்த நிலோபர் நிஷாவை, மூன்றாவதாக திருமணம் செய்ததாக தெரிகிறது. காதர் பாஷாவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும், சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு தருவதில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வீட்டிற்கு தாமதமாக வந்த காதர் பாஷாவிடம், நிலோபர் நிஷா இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, கொதிக்கும் எண்ணையை எடுத்து வந்து, காதர் பாஷாவின் மீது ஊற்றி உள்ளார். படுகாயங்களுடன் அலறிய காதர்பாஷாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.