பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் திருத்தணி கால்நடை மருந்தகம்
திருத்தணி:திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. இந்த மருந்தகத்திற்கு தினமும், நுாற்றுக்கணக்கான கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த மருந்தக கட்டடம், 1971ம் ஆண்டு கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. பொதுப்பணித் துறையினர் முறையாக கட்டடத்தை பராமரிக்காததால் தற்போது மருந்தக கட்டடம் பழுதடைந்து உள்ளது. குறிப்பாக மருந்தகத்தில் மருந்து இருப்பு வைக்கும் அறை, உதவி மருத்துவர் அறை, தடுப்பூசிகள் வைக்கும் அறை மற்றும் கதவு ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளன.இதுதவிர மழை பெய்யும் போது, தளத்தில் இருந்து தண்ணீர் ஒழுகி அறைகள் முழுதும் மழைநீர் தேங்குகிறது. மேலும் சுவர்களும் மழைநீர் நனைவதால், அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் அச்சத்துடன் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.மேலும், திருத்தணி வருவாய் கோட்டத்தில் இயங்கி வரும் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களுக்கு இங்கிருந்து தான் மருந்துகள் பிரித்து அனுப்பப்படும். அந்த மருந்தகளும் மழைநீரால் வீணாகி வருகின்றன.பழுதடைந்த கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டித்தரவேண்டும் என, கால்நடை பராமரிப்பு துறையின் திருத்தணி உதவி இயக்குனர், மாவட்ட இணை இயக்குனர் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மருந்தக கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில் புதிய மருந்தக கட்டடம் கட்டித் தர வேண்டும் என, கால்நடை விவசாயிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.