திருத்தணி-- நகரி நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை
நகரி:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தடம் எண் 97 பேருந்து நகரிக்கு செல்கிறது. அங்கிருந்து, திருத்தணி பைபாஸ், திருவள்ளூர், பூந்தமல்லி வழியாக சென்னை கோயம்பேட்டிற்கு இயக்கப்பட்டு வந்தது.தடம் எண் 123 ஏ பேருந்து, மூலகொத்துார் நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது.தடம் எண் 97 பி அரசு பேருந்து, திருத்தணியில் இருந்து, பள்ளிப்பட்டு, நகரி, திருவள்ளூர், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது.இதே போல், தடம் எண் 98 பஸ் திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை, நகரி, புத்துார் வழியாக நாராயணவனம் வரை இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்துகள் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது.இதனால், சித்துார் மாவட்டம், நகரி, புதுப்பேட்டை, சிந்தலப்பட்டடை, ஏகாம்பரகுப்பம், சத்திவாடா, புத்துார், நாராயணவனம் போன்ற கிராமங்கள் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், நெசவாளர்கள் பயன்பெற்று வந்தனர்.இந்நிலையில் கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் மேற்கண்ட நான்கு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் மீண்டும் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.இது குறித்து திருத்தணி போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' நிறுத்தப்பட்ட பஸ்களின் விவரம் குறித்து எங்களின் மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.