ஓட்டுநர் உரிமம் பெறுவோருக்கு மூன்று நாட்கள் விழிப்புணர்வு
திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தினமும் வாகன ஓட்டுநர், பழகுநர் உரிமம், புதிய வாகன பதிவு, கனரக வாகனங்கள் உரிமம் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் விதிமீறி இயக்கப்படும் வாகனங்கள் குறித்தும், போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலியாக இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் பணியில் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.அவர் பொறுப்பேற்ற நாள் முதல், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநர், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தோருக்கு, வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாள் காலை 9:15 - 10:00 மணி வரை, சிறப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் போக்குவரத்து விதிமுறை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பு, மொபைல்போனில் பாட்டு கேட்டவாறு வாகனம் இயக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு குறும்படம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், புதிதாக பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற வருவோர், இந்த விழிப்புணர்வு குறும்படங்களால், தங்களின் வாகனங்கள் இயக்கும் முறையை சரியாக செயல்படுத்துவர் என, நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.