பா.ஜ., நிர்வாகியை வெட்டிய வழக்கில் மூவருக்கு சிறை
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த சிறுவானுார் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார், 54; திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்கு பவானி, 45, என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இவர், திருவள்ளூர் பா.ஜ., மேற்கு மாவட்ட செயலராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பவானி, சிறுவானுார் ஊராட்சி தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஒத்தவாடை பகுதியில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணிகளை ஊராட்சி தலைவர் பவானி கூறியதின் பேரில், ரமேஷ்குமாரை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வேலு, 35, விஜயன், 31, திருமுருகன், 31, ஆகிய மூவரும், 'இந்த இடத்தில் ஏன் சாலை போடுகிறீர்கள்' எனக் கூறி, ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரமடைந்த வேலு, கத்தியால் ரமேஷ்குமாரை சரமாரியாக வெட்டினார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வேலு, விஜயன், திருமுருகன் ஆகிய மூவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.