பறிமுதல் ஆட்டோவின் டயர்கள் திருட்டு
திருவாலங்காடு:திருவாலங்காடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில், குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது, குற்றத்துக்கு அவர்கள் பயன் படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.பறிமுதல் வாகனங்கள், திருவாலங்காடு காவல் நிலையம் எதிரே மற்றும் அதன் வளாகத்தின் வெளியே, பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மட்கி வீணாகின்றன.இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள டயர், இன்ஜின், வீல்கள் உட்பட பல்வேறு பாகங்களை சிலர் திருடி செல்கின்றனர்.தற்போது திருவாலங்காடு காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருடர்கள் மூன்று சக்கரங்களையும் கழற்றி சென்றுள்ளனர். காவல் நிலையத்திலே பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாகவும், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது எனவும், சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.