திருவள்ளூர்: புகார் பெட்டி; பார்க்கிங் பகுதியாக மாறிய தேசிய நெடுஞ்சாலை
பார்க்கிங் பகுதியாக மாறிய தேசிய நெடுஞ்சாலை
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே பைபாஸ் பஜார் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள இணைப்பு சாலையில் நெருக்கடி காரணமாக கனரக வாகனங்கள் நிறுத்த முடியாததால், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலை பேருந்துகள், உணவகம் வரும் வாகனங்கள் என, எப்போதும் பார்க்கிங் பகுதி போல் தேசிய நெடுஞ்சாலை காணப்படுகிறது.இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பிற வானங்களுக்கு இடையூறு மட்டுமின்றி, விபத்து அபாயமும் அதிகரித்து வருகிறது.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். - அ.முகமது சபீக், கும்மிடிப்பூண்டி. குடிநீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுப்பரா?
திருத்தணி ஒன்றியம் தலையாறிதாங்கல் கிராமத்தில், பழுதடைந்த குடிநீர் தொட்டியில் இருந்து, சில ஆண்டுகளாக குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொட்டியின் துாண்கள் மற்றும் மேற்பகுதி சேதமடைந்துள்ளதால், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்வதால், பொதுமக்கள் நோய் பரவும் அபாயத்தில் உள்ளனர்.அப்பகுதி மக்கள் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி, புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டியின் மூலம் தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை. எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - --எஸ்.சேகர், தலையாறிதாங்கல். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
திருத்தணி - கார்த்திகேயபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம், வாரியார் நகர் மற்றும் பெரியார் நகர் பகுதி மக்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பையை கொட்டுகின்றனர்.இந்த குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அகற்றாததால், அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, குப்பை கழிவுகளை தினமும் அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா.மோகன், திருத்தணி. அங்கன்வாடி எதிரே சுகாதார சீர்கேடு
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கோபாலபுரத்தில் நுாலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு இடையே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு எதிரே குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. முட்டை ஓடுகளும், உணவு பொருட்களும் இங்கு கொட்டப்படுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், பள்ளி மாணவர்களும், அங்கன்வாடி குழந்தைகளும் நடமாடும் பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கு. சிவகுருநாதன், கோபாலபுரம்